Monday, November 16, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை

பாடல் 10

குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

மைத்தடங்கண்ணி யசோதைதன் மகனுக்கு* இவை
ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம்* ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை*
எத்தனையும் சொல்லவல்லவர்க்கு இடரில்லையே.


பொருள்:

மைத்தடங்கண்ணி யசோதைதன் மகனுக்கு - அகன்ற, பெரிய, அழகிய கண்களை உடையவளான யசோதை அன்னை, தன் மகனான குட்டிக் கண்ணனின்

இவை ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம் - வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாயசக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன, இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம்

ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை - மேன்மையுடைய திருவில்லிப்புத்தூர் நகர் வாழ், இறைவனின் தூதுவனான அடியன் விட்டுசித்தன் விரிவாய் உரைத்த, இந்த தீந்தமிழ்ப் பாடல்கள்

எத்தனையும் சொல்லவல்லவர்க்கு இடரில்லையே - முழுவதையும் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.

பதவுரை:

அகன்ற, பெரிய, அழகிய கண்களை உடையவளான யசோதை அன்னை, தன் மகனான குட்டிக் கண்ணனின் வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாயசக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன, இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம் மேன்மையுடைய திருவில்லிப்புத்தூர் நகர் வாழ், இறைவனின் தூதுவனான அடியன் விட்டுசித்தன் விரிவாய் உரைத்த, இந்த தீந்தமிழ்ப் பாடல்கள் முழுவதையும் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.

2 comments:

Radha said...

//எத்தனையும் சொல்லவல்லவர்க்கு இடரில்லையே - முழுவதையும் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.//
எத்தனை = அத்தனை?

அத்தனையும் சொல்லவல்லவர்க்கு இடரில்லையே என்று சொல்லாமல் எத்தனையும் என்று சொல்வதன் பொருள் என்ன?

ஒன்று, இரண்டு, மூன்று என்று எத்தனை பாசுரங்கள் சொன்னாலும் (எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) என்று பொருள் கொண்டால் சரியா?

தமிழ் said...

Radha said...

ஒன்று, இரண்டு, மூன்று என்று எத்தனை பாசுரங்கள் சொன்னாலும் (எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) என்று பொருள் கொண்டால் சரியா?

சரிதான் இராதா ஐயா.