Saturday, October 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 8 கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ அச்சு தனுக்கென்று அவனியாள் போத்தாள் நச்சு முலையுண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ
பொருள்:
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை - இடுப்புக் கச்சையோடு, தங்கத்தாலான குறுவாள், பட்டாடை, தோளில் அணியும் வளை இவற்றோடு கச்சு - இடுப்பில் இறுக்கிக் கட்டும் பட்டை (belt) சுரிகை - குறுவாள் காம்பு - பட்டாடை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ - நெற்றியில் அணிய மணி ஆடும் சுட்டியும், ஒப்பற்றத் திருவடிகளுக்கு பொன்னாலான பூவும் நிரைப்பொற்பூ - நிரைந்திருக்கும் பொற்பூ கால்களை நிரைக்கும் பொற்பூவா அல்லது (நிலத்தில்) நடக்கும் போது அடி எடுத்ததும் அங்கே ஒரு மலர் காட்டுவாங்களே, அந்த மாதிரியா? தாமரை மணாளனுக்கு தங்க மலராமா? நடக்கட்டும். அச்சு தனுக்கென்று அவனியாள் போத்தாள் - அச்சுதன் என்றழைக்கப் படும் உனக்காக நிலமகள் அனுப்பி இருக்கிறாள் இங்கன ஏன் அச்சுதன் பேர் குறிப்பிடுறார் ஆழ்வார்? அச்சுதன் என்ற பெயரின் விளக்கத்தில் பொருள் புரியுமோ? நச்சு முலையுண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ - பூதகியின் நச்சுப்பால் உண்ட நாராயணனே அழாது கண்ணுறங்கு பதவுரை: இப்போது நிலமகள் முறை! மிடுக்கான தோற்றத்துக்கென்று பொருட்களைச் பட்டியலிட்டு அனுப்புகிறாள். இடுப்புக்கு கச்சு, அதில் சொருக தங்கத்தாலான குறுவாள், பட்டாடை, தோளில் பொருத்தத் தங்க வளை, நெற்றியில் ஆடும் மணிச்சுட்டி, திருவடிகளை நிரப்பும் பொற்பூவும் அச்சுதன் என்று பெயர் பெற்ற உனக்கு நிலமகள் தந்திருக்கிறாள். பூதகியை அவளின் முலை நச்சுப் பால் உண்டு முடித்த நாராயணனே நான் தாலாட்ட நீ அழாது கண்ணுறங்கு.

4 comments:

Radha said...

அச்சுதன் - ஸ்திரமானவன்; என்றும் நிலையானவன்; பக்தர்களை ஒரு பொழுதும் நழுவ விடாதவன். One who never slips from protecting His devotees... இப்படின்னு எல்லாம் அர்த்தம் சொல்றாங்க.
//இங்கன ஏன் அச்சுதன் பேர் குறிப்பிடுறார் ஆழ்வார்? //
எனக்கும் தெரியலே. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இடுப்புக் கச்சையோடு, தங்கத்தாலான குறுவாள்//

ஓகோ! பொறந்த கொழந்தைக்கு குத்துவாள் கிஃப்ட்டா கொடுக்கறாங்களோ? என்னா ஒரு வீர மரபு! மண்ணின் மகள்! மண்மகள் அல்லவா! ஆகா! :)

//அச்சு தனுக்கென்று அவனியாள் போத்தாள்//

நம்ம ராதா சொன்னதே தான்!
அச்சுதன் = உறுதி மிக்கவன்! உறுதியாகத் தாங்குவோன்!

அதை ஏன் நில மகளுக்குச் சொல்லணும்?
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலே - தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை!

எப்படி நிலமகள் உறுதியாகத் தாங்குறாளோ, அதே போல் உறுதியாகத் தாங்கும் "அச்சுதன்"! அதான் ஜோடிப் பொருத்தம்! அதான் ஆழ்வார் இந்தப் பேரைக் குறிக்கிறார்! :)

Anonymous said...

இதுவரைக்கும் கொடுத்த பரிசுகளில் நம்ம நிலமகள் கண்ணனுக்கு அதிகமா கொடுத்து இருக்காங்கப்பா ! ரொம்ப பாசகார பொண்ணுங்க நம்ம பூமி

முகவை மைந்தன் said...

அச்சுதன் - நிலையானவன். உறுதியானவன். அப்படின்னா மன்னன்னு பொருள் கொள்ளலாம். பாத்தீங்களா, காரணத்தோடத் தான் கையாண்டிருக்கார் பெரியாழ்வார்.