Friday, August 21, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி- வண்ணமாடங்கள்
பாடல் 6

கையும்காலும் நிமிர்த்துக் கடாரநீர்*
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்*
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட*
வையமேழும் கண்டாள் பிள்ளைவாயுளே.

பொருள்:

குழந்தைப் பிறந்தவுடனேயே, கருவிற்குள் மடங்கிய நிலையிலேயே இருப்பதால், அதனைக் குளிப்பாட்டும் பொழுது, உடலை நன்றாக உருவிவிட்டு, கைகளை முன்னும் பின்னும் மடக்கி, கால்கள் வளைந்துவிடாது இருப்பதற்காக, அதை நன்கு விரைப்பாக நீட்டிப் பிடித்த வண்ணம் வெந்நீரை ஊற்றுவர். குழந்தையின் உடலுக்கு உறுதி தரும் வண்ணம் குளிப்பாட்டும் பொழுது இயன்ற வகைகளில் கை காலை மடக்கி, சில உடற்பயிற்சிகளைச் செய்வர். இதனால், குழந்தையின் உடலும் நல்ல வடிவம் பெறும்.

கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர் - குழந்தையின் கை, கால்களை நன்கு உருவிவிட்டு, கால்கள் வளைந்துவிடாது, இருப்பதற்கு அதனை நிமிர்த்திவிடுவதற்காக, கடார நீர் - அகன்ற, பெரிய கொப்பரையில் நீரூற்றி

பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் - அகன்ற, பெரிய கொப்பரையில் நீரூற்றி, அதை தள புளா ன்னு ல்லாம் கொதிக்க விடாம, நல்ல வெதுவெதுப்பாக சுடவைத்து, மிதமான வெண்ணீராக்கி, பசுமையான பிஞ்சு மஞ்சளை, மைய அரைத்து மேனியெங்கும் பூசி, மஞ்சளின் ஒரு சிறிய துண்டைக் கொண்டு (பைய - மெதுவாக, மெல்ல; வாட்டி - சூடு செய்து; பசுஞ்சிறு மஞ்சள் - பசுமையான, சிறிய மஞ்சள்)

ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட - தலைவனின் நாவினை வழிப்பதற்காக, யசோதையை, குழந்தையின் வாயைத் திறந்திட்ட போது, (ஐய - தலைவன்; அங்காத்தல் - வாய்திறத்தல்)

வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே -
ஏழு உலகத்தையும் குழந்தை கண்ணனின் வாயினுள் யசோதை கண்டாளே. (வையம் - உலகம்; வாயுளே - வாயின் உள்ளே)


பதவுரை:

பிறந்தவுடன் குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக அகன்ற, பெரிய பாத்திரத்தில் நீரூற்றி, அதை கைபொறுக்குமளவுக்கு இதமாக சூடேற்றி, கண்ணனின் கை கால்களை நன்கு உருவிவிட்டு, அவை நன்கு உறுதிபடுவதற்காக, இதமான வெந்நீரை ஊற்றி கால்களை நிமிர்த்திவிட்டாள் யசோதை. கிருமி நாசினியாகவும், மருத்துவக் குணம் உடையதுமான மஞ்சளை, நன்றாக மைப்போல் அரைத்து,அதை உடல் முழுவதும் பூசினாள். அதன்பிறகு, கண்ணனின் நாக்கிலுள்ள அசடினை எடுப்பதற்காக, ஒரு சிறிய மஞ்சளால் நாவினை வழிக்க வாயைத் திறக்கும் போது, அண்டகுலத்துக்கு அதிபதியானவனின் வாயினுள் ஏழு உலகத்தையும் கண்டாள் யசோதை.

என்ன அற்புதமான பாடல்!! குழந்தை கண்ணனின் முதல் திருவிளையாடல், சிறையில் பெற்றவர்களிடம், இரண்டாவதாக, பெற்றுக் கொண்டவளிடம்!!

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட - தலைவனின் நாவினை வழிப்பதற்காக//

அந்தக் கண்ணன் தேனமுத வழிசல் அடிசனை, அமிழ்தினை...
எனக்குத் தர வேணுமாய் இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன், என் கண்ணா! மணிவண்ணா! என்றன் மனச்சுடரே! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான விளக்கம் தமிழ்!
பொறந்த குழந்தையின் கை-கால்களை முதல் குளியல் போது நீவி விடும் விதத்தை நேரில் பாத்தாப் போலச் சொல்லி இருக்கீக!
எல்லாம் உங்க மாறனுக்கு பண்ண அனுபவம் போல! :)

என்ன அழகான தமிழ்ச் சொல்லாட்சி பாருங்க!
* பைய வாட்டி = வெது வெதுப்பா தண்ணி விளாவி
* அங்காந்திட = ஆந்திட-ன்னு சொல்லும் போதே "ஆஆஆ"-ன்னு வாய் காட்டுறது தெரியுதுல்ல? ஆந்திட....அடடா! எழுத்துல ஓவியமா?

கண்ணன் வளர்ந்து, மண்ணை உண்ணும் போது தான் யசோதைக்கு உலகம் காட்டுவான்-ன்னு சொல்வாய்ங்க! ஆனால் இங்கு ஆழ்வாருக்கு அது வரை வெயிட் பண்ண பொறுமை இல்லை போல! :) பொறந்த கொழந்தை நாக்கு வழிக்கும் போதே, உலகம் பாத்துடறாரு! நமக்கும் காட்டிடறாரு! :)

தமிழ் said...

கண்ணன் வளர்ந்து, மண்ணை உண்ணும் போது தான் யசோதைக்கு உலகம் காட்டுவான்-ன்னு சொல்வாய்ங்க! ஆனால் இங்கு ஆழ்வாருக்கு அது வரை வெயிட் பண்ண பொறுமை இல்லை போல! :) பொறந்த கொழந்தை நாக்கு வழிக்கும் போதே, உலகம் பாத்துடறாரு! நமக்கும் காட்டிடறாரு! :)//

-----------------------------

மண்ணை உண்ட வாயினுள் வையகம் காட்டியவன், கோகுலக் கண்ணன்;

மண்ணில் பாதம்படும் முன்னமேயே வையகம் காண்பித்தவன், திருக்கோட்டியூர் கண்ணன்... :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் பதிவின் பாசுர வரிகளையும் விளக்கத்தையும்,
"உங்க பதிப்புரிமைத் திட்டத்தை மீறி",
அடியேன் பதிவில் அப்படியே இட்டு விட்டேன்!
இதோ! http://madhavipanthal.blogspot.com/2009/08/copy-cat-krs.html
அடியேனை மன்னிக்கவும்! :)

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இந்தப் பதிவின் பாசுர வரிகளையும் விளக்கத்தையும்,
"உங்க பதிப்புரிமைத் திட்டத்தை மீறி",
அடியேன் பதிவில் அப்படியே இட்டு விட்டேன்!
இதோ! http://madhavipanthal.blogspot.com/2009/08/copy-cat-krs.html
அடியேனை மன்னிக்கவும்! :)//

ஹா ஹா ஹா...

இங்க பதிப்புரிமைத் திட்டமெல்லாம் ஒன்னும் கிடையாது...

அப்படிப் பார்த்தா நீங்க இத ஆழ்வார்கள் கிட்ட தான் சொல்லனும்...

We are also a COPYCAT from aazhwars!! :-))

இங்கிலீசு சரியா பேசிட்டேனா?? ;-))

தமிழ் said...

உங்க வலைப்பதிவுல, எங்களுக்கு அறிமுகம் கொடுத்த; அரி முகம் கொடுத்த அ உ ஆ சூ ஸ்ஸாட்டார் அண்ணன் கேயாரெஸ் அவர்களுக்கு எங்கள் குழாம் சார்பாக நன்றிகள் பல!! ;-))