Friday, June 19, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 7

திருப்பல்லாண்டு பாடல் 7

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி
பாய* சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்:

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின் - (கொழுந்து விட்டெரியும் செழுந்தணல் எவ்வளவு பொலிவா இருக்குமோ அதவிடப் பொலிவானது) அதைத்தான்,தீயிற் பொலிகின்ற - தீயிலிட்டு பொலிவு பெற்ற, சிவந்த சுடரொளி வீசும் ஆழி( சுதர்சன சக்கரம்), தீயிலிட்ட பொன்னைப் போல் மின்னும் திருச்சக்கரத்தின், (தீயிற் பொலிகின்ற - தீயிலிட்டு பொலிவு பெற்ற, செஞ்சுடராழி - சிவந்த சுடருடைய திருச்சக்கரம், திகழ் - மின்னுதல்)

கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் - இறைவனின் திருக்கோயிலிலே தீயிலிட்டுச் சிவந்த திருசங்கு மற்றும் திருசக்கரத்தின் சின்னங்களை எங்கள் தோள்களில் பக்தியுடன் முத்திரையாக ஒற்றிக் கொண்டு தலைமுறை தலைமுறையாக, எங்கள் இல்லங்களில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட மனதுடன் நின்று, தொடர்ந்து திருத்தொண்டு புரிந்து வருகின்றோம்! (கோயிற் பொறி - திருசங்கு, திருசக்கர முத்திரை, ஒற்றுண்டு - அடையாளச் சின்னமாகக் கைகளில் ஒற்றிக் கொண்டு, குடி குடி - குடும்பத்திலுள்ள அனைவரோடும், ஆட்செய்கின்றோம் - திருத்தொண்டு புரிகின்றோம்)

மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய - வாணாசுரன்(பாணாசுரன்) என்னும் அசுரன், பிரகலாதனின் பேரனான மகாபலி என்னும் அசுரவேந்தனின் புதல்வன்தான் இந்த பாணாசுரன். ஆயிரங்கரங்கள் கொண்ட இந்த பாணாசுரன் மாயப்போர் புரிவதில் வல்லவன். இவன் மகளான உஷை, பிரத்யும்னனி்ன் மகனான அநிருத்தனை ( இறைவன் கிருஷ்ணனின் பேரனாவான்)க் கனவில் கண்டு, காதல் வசப்பட்டாள். கனவிலேத் தான் கண்டு ஒருதலையாகக் காதல் கொண்டதை, தன் தோழியான சித்திரலேகா என்பவளிடம் கூற, அவளும் அவன் யாரெனக் கண்டறிந்து, ஒருநாள் இரவில் தன் மாயசக்தியால் அநிருத்தனை துவாரகாவில் இருந்து தூக்க நிலையிலேயேக் கடத்திவந்து, இளவரசியான உஷையிடம் ஒப்புவித்தாள்.

இவர்களின் காதலை அறிந்ததும், பாணாசுரன், அநிருத்தனை சிறையிலடைத்துவிட்டான். இதையறிந்த, கிருட்டினனும், அவன் தந்தையான பிரத்யும்னன், பலராமன் மற்றும் ஏனையோரும் பாணாசுரனின் அரண்மனையை நோக்கி படையெடுத்து வந்தனர். அப்பொழுது நடந்த போரில் இறைவன் கண்ணன் தன் திருச்சக்கரத்தால் பாணாசுரணின் கைகளை எல்லாம் துண்டித்துவிட்டான். இதனால் அந்த அசுரனின் தோள்களிலிருந்து இரத்தம் குபு குபுவெனப் பாய்ந்தோடியது.

அசுரனை வதம் செய்யாமல் அவனுக்கு ஆணவம் தந்த அவனது கைகளை மட்டும் துண்டித்து, அவனுக்குத் திருவருள் புரிந்தார், இறைவன்! அதன்பின், துவாரகாவில் தன் பேரனான அநிருத்தனுக்கும் உஷைக்கும் முறைப்படித் திருமணம் செய்துவைத்தார், கண்ணபெருமான்.

இதுதாங்க கதைச் சுருக்கம்!!

மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய - கிருஷ்ணாவதாரத்தில், மாயப் போர் புரிவதில் வல்லவனான வாணாசுரன் என்னும் அசுரனின் ஆயிரம் கைகளை இரத்தம் பொங்கிவரும் அளவுக்கு திருச்சக்கரத்தால் துண்டித்த, (மாயப் பொருபடை - மாயவித்தைகள் புரியும் பகைவனின் படை, வாணன் - வாணாசுரன் என்னும் அசுரன், பொழிகுருதி - இரத்தம் வழியவழிய, குருதி -இரத்தம்)

சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே! - இவ்வாறு, மாயப் போர்புரிபவனின் ஆணவக் கைகளை இலாவகமாய் திருசக்கரத்தால் வெட்டிய வீழ்த்திய வல்லவனுக்கு பல்லாண்டு கூறுவோமாக! (வல்லான் - வல்லவன், சிறந்தவன்)

பதவுரை:

மாயப் போர்புரியும், வாணாசுரனின் ஆயிரந்தோள்களையும் இரத்தம் ஆறென வழிந்தோடும் அளவுக்குத் துண்டித்த, திருச்சக்கரத்தைத் தம் கையில் தாங்கிய வல்லவனான கண்ணபிரானுக்கு, நாங்கள், எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் இறைவனின் கோயிலிலே, தீயிலிட்டு பொலிவுபெற்ற சிவந்த சுடரினை உமிழும் திருசங்கு,சக்கரப் பொறிகளை எங்கள் தோள்களில் இறைவனின் அடியோர்கள் என்னும் அடையாள முத்திரையாக ஒற்றிக் கொண்டு அவனுக்குத் திருத்தொண்டுகள் புரிகின்றோம்! அத்தகைய வல்லமைமிக்க இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவோமாக!!

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்//

சமாஸ்ரயணம் என்னும் திருச்சின்ன முத்திரைகளைத் தரித்தல் ஏன் என்பது பற்றி அப்பறம் விரிவாச் சொல்லுங்க!

பாசுரப் பொருளும் கதையும் பொருந்தச் சொன்னமைக்கு நன்றி தமிழ்! :)

//தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி//

அதாச்சும் சில ஆயதங்கள் எல்லாம் நாளாக நாளாகத் துருப் பிடித்து விடும், இல்லை கூர் மழுங்கிடும்! அப்பறம் சாணை பிடிக்கணும்!

ஆனால் சக்கரம் அப்படி இல்லையாம்! கொல்லன் உலையில் இருந்து அப்ப தான் எடுத்தாப் போல இருக்கு! தீயிற் பொலிகின்றது! அதான் தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்!

தமிழ் said...

//சமாஸ்ரயணம் என்னும் திருச்சின்ன முத்திரைகளைத் தரித்தல் ஏன் என்பது பற்றி அப்பறம் விரிவாச் சொல்லுங்க!//

மன்னிக்கனும் கேயாரெஸ்!! இவற்றைப் பற்றி எல்லாம் எனக்கு விரிவா தெரியல...தேடிட்டு இருக்கேன்...

உங்களுக்கு எதாச்சும் அகப்பட்டா, கொஞ்சம் விளக்குங்க..நாங்கள் விளங்கிக் கொள்கிறோம்!!

இறைவனுடன் இருக்கும் இந்த திருச்சின்னங்கள், அணிந்து கொள்வதன் மூலம் அவை நம்மைக் காக்கும் என்று எண்ணினாலும்.... கஜேந்தரனை விரைந்து வந்து கூகுவிடமிருந்து காப்பாற்றியவர் சக்கரத்தாழ்வார். அப்படியானால் கஜேந்திரன் என்ன பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டதா என்ன???

(இந்த திருச்சின்ன முத்திரைகளை அணிந்து கொள்வதன் மூலம் இறைவனின் அடியவர்கள் என்றாகின்றனர்... ) விளக்கம், ப்ளீஸ்....

அப்பாடா, இதுக்கே கண்ண கட்டுதே!